< Back
கிரிக்கெட்
தீக்சனா ஹாட்ரிக் வீண்... இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
கிரிக்கெட்

தீக்சனா ஹாட்ரிக் வீண்... இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

தினத்தந்தி
|
8 Jan 2025 4:37 PM IST

நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மகேஷ் தீக்சனா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

ஹாமில்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக இந்த ஆட்டம் 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 37 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 255 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 79 ரன், மார்க் சாம்ப்மென் 62 ரன் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இலங்கை அணி, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக 30.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அனைத்து விக்கெட்டையும் இழந்து 142 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் நியூசிலாந்து 113 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக காமிந்து மெண்டிஸ் 64 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 3 விக்கெட், ஜேக்கப் டப்பி 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்