< Back
கிரிக்கெட்
அவர்கள்தான் பும்ராவை எதிர்கொள்ள சரியானவர்கள் - இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்
கிரிக்கெட்

அவர்கள்தான் பும்ராவை எதிர்கொள்ள சரியானவர்கள் - இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்

தினத்தந்தி
|
2 Dec 2024 12:56 PM IST

இந்திய அணி 2025-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் பும்ரா 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக செயல்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா, 3 வகையான கிரிக்கெட்டிலும் தனித்துவமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணிகளை திணறடித்து வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

இந்திய கிரிக்கெட் அணி 2025-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் பும்ராவை சிறப்பாக எதிர்கொள்ள பென் ஸ்டோக்ஸ் 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அடுத்த வருடம் நடைபெறும் தொடரில் எளிமையான மாற்றத்தை செய்வது இங்கிலாந்துக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு டாப் 3 வீரர்களில் இன்னும் ஒருவர் இடது கை பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்பதை நான் பார்த்தேன்.

ஏனெனில் பும்ரா புதிய பந்தை வலது கை பேட்ஸ்மேன்களின் கால்களை நோக்கி வீசுகிறார். அதனாலேயே அவர் நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் சுமித் ஆகியோரை தெறிக்க விடும் அளவுக்கு பந்து வீசினார். எனவே இடது கை பேட்ஸ்மேன்கள்தான் பும்ராவை எதிர்கொள்ள பொருத்தமானவர்கள்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்