அவர்களால் மட்டுமே வெற்றியை பெற்று கொடுக்க முடியாது - விமர்சனங்கள் மீது ரோகித் ஆதங்கம்
|அனைத்து வீரர்களுக்குமே மோசமான நாட்கள் அமையும் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பை,
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.
முன்னதாக புனேவில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய மூத்த ஸ்பின்னர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விக்கெட்டுகளை எடுக்கவில்லை. மறுபுறம் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் 11 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு போராடினார்.
இதனால் இந்திய அணியின் தோல்விக்கு இந்திய அணியின் அனுபவ வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரது சுமாரான செயல்பாடுதான் காரணம் என்று அவர்கள் மீது விமர்சனம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய வேளையில் அவர்கள் இருவரும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், "அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. எல்லா போட்டியிலும் அவர்கள் இருவரும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அனைத்து போட்டியிலுமே அவர்கள் இருவரால் வெற்றி பெற்று கொடுக்க முடியாது. அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
அதை தவிர்த்து இரண்டு வீரர்களை மட்டுமே நம்பி வெற்றியை யோசிப்பது என்பது சரியானது கிடையாது. அவர்கள் இருவருமே திறமையும், அனுபவமும் நிறைந்தவர்கள். இந்திய அணிக்காக பல்வேறு விஷயங்களை அவர்கள் செய்திருக்கிறார்கள். அளப்பரிய பங்கை அளித்திருக்கும் அவர்களால்தான் 18 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி சொந்த மண்ணில் வெல்ல முடிந்தது.
எனவே அவர்கள் இருவரது திறமையையும் அனுபவத்தையும் பற்றி நான் சிந்திக்கப்போவதில்லை. அவர்கள் இருவருக்குமே இந்த தொடரில் என்ன நடந்திருக்கிறது என்று நன்றாக தெரியும். அனைத்து வீரர்களுக்குமே மோசமான நாட்கள் அமையும். அந்த வகையில் இந்த தொடரில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் அதற்கு அனைவருமே பொறுப்புத்தான் என்று கூறுவேன்.
அனுபவ வீரர்களான அவர்கள் இருவரும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாத போது இளம் வீரர்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். அந்த வகையில் வாஷிங்டன் சுந்தர் இந்த தொடரில் இரண்டாவது போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்டார்" என்று கூறினார்.