< Back
கிரிக்கெட்
வெளிநாட்டு பயிற்சியாளர்களுடன் அந்த பிரச்சினை இருக்கிறது - நசீம் ஷா அதிருப்தி

image courtesy:AFP

கிரிக்கெட்

வெளிநாட்டு பயிற்சியாளர்களுடன் அந்த பிரச்சினை இருக்கிறது - நசீம் ஷா அதிருப்தி

தினத்தந்தி
|
9 Aug 2024 7:42 AM IST

பாகிஸ்தான் அணியில் வீரர்கள் யாருமே ஒற்றுமையுடன் இல்லை என்று கேரி கிறிஸ்டன் தெரிவித்திருந்தார்.

கராச்சி,

சமீபத்தில் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியானது 2 வெற்றிகள் மட்டுமே பெற்ற நிலையில் லீக் சுற்றுடன் வெளியேறியது. முதலாவது ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், 2-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இதனால் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு சில வாரங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் 20 ஓவர்) அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் பொறுப்பேற்றார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கேரி கிறிஸ்டன்.

அதன்பின் தென் ஆப்பிரிக்க அணிக்கு பயிற்சியாளராக இருந்த அவர், ஐபிஎல் தொடரில் ஏராளமான அணிகளுடன் பணியாற்றி வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் எழுச்சிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய தலைமையிலும் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்காத பாகிஸ்தான் முதல் சுற்றுடன் வெளியேறியது.

அப்போது பாகிஸ்தான் அணியில் வீரர்கள் யாருமே ஒற்றுமையுடன் இல்லை என்று கேரி கிறிஸ்டன் தெரிவித்திருந்தார். அதனால் இதற்கு முன் இந்தியா போன்ற அணிகளில் வேலை செய்த தாம் பாகிஸ்தான் போன்ற அணியை பார்த்ததில்லை என்று அவர் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் அடுத்ததாக வங்காளதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலிய வீரர் முன்னாள் ஜேசன் கில்லஸ்பி பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே கேரி கிறிஸ்டன், கிலஸ்பி போன்ற வெளிநாட்டு பயிற்சியாளர்களுடன் தாங்கள் நினைப்பதை பாகிஸ்தானி மொழியில் பேச முடியவில்லை என நசீம் ஷா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "வெளிநாட்டு பயிற்சியாளர்களுடன் மொழி பிரச்சினை இருக்கிறது. சில வீரர்கள் புரிந்து கொள்கின்றனர். ஆனால் சிலருக்கு அவர்களிடம் பேசுவதற்கு மொழி பெயர்க்க ஒருவர் தேவைப்படுகிறார். உண்மையில் உங்களுடைய சொந்த மொழியில் பயிற்சியாளருடன் தொடர்பு கொள்வது எளிதாக இருக்கும். குறிப்பாக சில விஷயங்களை தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டியது இருக்கும். ஆனால் அப்போது நீங்கள் மொழிபெயர்ப்பாளருடன் பயிற்சியாளரை சந்திக்க வேண்டியுள்ளது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்