அஸ்வின் - ஜடேஜா கூட்டணிக்கு மாற்று ஜோடி இல்லை - இந்திய முன்னாள் வீரர்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் - ஜடேஜா இடம்பெறவில்லை.
மும்பை,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது.
முன்னதாக முதல் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா இடம்பெறாதது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் ஐ.சி.சி. டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருக்கும் இவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்தனர். இருப்பினும் இந்திய அணி வெற்றி கண்டது.
இந்நிலையில் இந்தியாவில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய ஜோடிக்கு மாற்று இல்லை என்று புஜாரா பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருடைய தரத்தை கொண்ட வீரர்கள் உங்களுக்கு கிடைக்க மாட்டார்கள். உள்ளூரில் நான் நிறைய ஸ்பின்னர்களை பார்த்துள்ளேன். ஆனால் அவர்களுக்கான (அஸ்வின் & ஜடேஜா) மாற்று வீரர்கள் உண்மையில் நம்மிடம் இல்லை என்பதே என்னுடைய கருத்து. நாம் வளர்க்க வேண்டிய சில திறமையான வீரர்கள் நம்மிடம் உள்ளார்கள்.
ஆனால் அவர்கள் நம்முடைய ஜாம்பவான்கள். அஸ்வின் அல்லது ஜடேஜா போன்றவர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இன்னும் அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய பங்காற்ற முடியும் என்று நான் கருதுகிறேன். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பின் நாம் இங்கிலாந்தில் முக்கியமான தொடரில் விளையாட உள்ளோம்.
அங்கே அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடியாக விளையாட முடியுமா? என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அவர்களில் ஒருவர் பிளேயிங் லெவனில் இருந்தால் போதும் என்று நீங்கள் விரும்புவீர்களா? அல்லது வாஷிங்டன் சுந்தர் விளையாட போகிறார் என்றால் அவருடைய ஜோடியாக வேறு யாரேனும் ஒருவர் இருக்கலாம்" என்று கூறினார்.