இதை விட பெரிய அவமானம் இருக்க முடியாது - பாகிஸ்தான் அணியை விளாசும் முன்னாள் வீரர்கள்
|உலகக்கோப்பையில் வங்காளதேசத்திடம் சந்தித்த தோல்வியை போன்ற அவமானத்தை இன்று பாகிஸ்தான் சந்தித்துள்ளதாக அக்தர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
லாகூர்,
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 159 ரன்கள் அடித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்காவும் 159 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 18 ரன்கள் அடித்தது. அதைத்தொடர்ந்து 19 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு எதிராக 13 ரன்கள் மட்டுமே கொடுத்த நேத்ராவல்கர் 1 விக்கெட்டை எடுத்து அமெரிக்காவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியை அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் விளாசி வருகின்றனர். அந்த வரிசையில் 1999-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் வங்காளதேசத்திடம் சந்தித்த தோல்வியை போன்ற அவமானத்தை இன்று பாகிஸ்தான் சந்தித்துள்ளதாக சோயப் அக்தர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "பாகிஸ்தானுக்கு பெரும் ஏமாற்றம். நல்ல தொடக்கத்தை வழங்கவில்லை. இந்த தோல்வி 1999-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் வங்காளதேசத்துக்கு எதிராக நாங்கள் செய்ததுபோல இன்று நாம் தேவையற்ற வரலாற்றை உருவாக்கியுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக இன்றைய போட்டியில் பாகிஸ்தான் ஒரு போதும் வெற்றி பெற தகுதியற்ற அணியாக செயல்பட்டது. அதனாலேயே அமெரிக்கா அற்புதமாக விளையாடி ஆதிக்கத்தை பெற்றனர். அமீர், ஷாஹீன் ஆகியோர் முயற்சித்தனர். இருப்பினும் எங்களால் வெற்றியைத் தாண்ட முடியவில்லை" என்று கூறினார். -
அதேபோல இது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மிகப்பெரிய அவமான தோல்வி என்று முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கமரான் அக்மல் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மிகப்பெரிய அவமானமாகும். நமக்கு இதை விட பெரிய அவமானம் இருக்க முடியாது. அமெரிக்கா அபாரமாக விளையாடியது. அவர்கள் கீழ் வரிசையில் உள்ள அணியாக உணரவில்லை. அவர்கள் ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தானுக்கு மேலே இருப்பதுபோல் நான் உணர்கிறேன். அந்தளவுக்கு அவர்கள் முதிர்ச்சி தன்மையை காட்டினர்" என்று கூறினார்.