< Back
கிரிக்கெட்
காபாவில் இம்முறை இந்தியாவை வீழ்த்த திட்டங்கள் உள்ளன - கம்மின்ஸ் எச்சரிக்கை
கிரிக்கெட்

காபாவில் இம்முறை இந்தியாவை வீழ்த்த திட்டங்கள் உள்ளன - கம்மின்ஸ் எச்சரிக்கை

தினத்தந்தி
|
13 Dec 2024 3:57 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது போட்டி காபா மைதானத்தில் நடைபெற உள்ளது.

பிரிஸ்பேன்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபாவில் ஸ்டேடியத்தில் நாளை இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடைசியாக 2021-ல் காபா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா வரலாற்று வெற்றியை பெற்றது. அதேபோல் இம்முறையும் இந்திய அணி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

ஆனால் நடப்பு தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பவுன்சர்களை வீசினார். 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் காபாவிலும் இந்திய அணியை வீழ்த்த அதே போன்ற திட்டங்களை தயாராக வைத்துள்ளதாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் எச்சரித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஆம் அடுத்த போட்டியிலும் பவுன்சர்களை வீசுவதற்கு சாத்தியங்கள் உள்ளன. 2-வது போட்டியில் அது வேலை செய்தது. அது மட்டுமல்லாது எங்களிடம் வேறு திட்டமும் உள்ளது. நான் எப்போதும் 2 திட்டங்களை (ஏ மற்றும் பி) தயாராக வைத்திருப்பேன். ஒரு திட்டம் வேலையாகவில்லையெனில் மற்றொன்றை பயன்படுதுவேன்.

2வது போட்டியில் அந்தத் திட்டம் வேலை செய்ததால் இந்தப் போட்டியிலும் ஏதோ ஒரு நேரத்தில் அதை நாங்கள் பயன்படுத்துவோம். காபா மைதானத்தை நேற்று நான் பார்த்தேன். அது கடந்த சில வருடங்களை போல் நன்றாக உள்ளது. கடந்த சில தினங்களாக சூரிய வெளிச்சமும் அதன் மீது நன்றாக பட்டது. இருப்பினும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியை போல் அது இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என கூறினார்.

மேலும் செய்திகள்