'நீங்கள் மீண்டு வருவதை இந்த உலகம் எதிர்பார்க்கிறது விராட்' - யுவராஜ் பிறந்தநாள் வாழ்த்து
|விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
புதுடெல்லி,
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். இந்தியாவுக்காக கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் 27,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
பேட்டிங்கில் மட்டுமல்ல விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமும் அதிரடியான செயல்பாடுகளையும் வெளிப்படுத்துவதற்கு பெயர் போனவர். குறிப்பாக எதிரணியினர் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்காக அசராமல் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதை விராட் கோலி வழக்கமாக வைத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள், சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது அதிக சதங்கள், அதிவேக 27,000 ரன்கள் என்று ஏராளமான சாதனைகள் படைத்து வரும் அவர், சச்சினுக்கு அடுத்து ஜாம்பவான் வீரராக போற்றப்படுகிறார்.
இந்நிலையில் விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ஏராளமான முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் என ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், விராட் கோலியின் நண்பருமான யுவராஜ் சிங் அவருக்கு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #கிங்கோலி! நீங்கள் மீண்டு வருவதை இந்த உலகம் ஆவலுடன் எதிர்நோக்குகிறது. கடந்த காலங்களில் நீங்கள் அதை செய்திருக்கிறீர்கள். மீண்டும் அதை நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். கடவுள் ஆசீர்வதிப்பார்!" என்று பதிவிட்டுள்ளார்.