
Image Courtesy: AFP
பிட்ச் இருதலைப் பட்சமாக இருந்தது - ஹர்ஷித் ராணா பேட்டி

நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
நாக்பூர்,
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், இந்த மைதானத்தின் பிட்ச் இருதலைப் பட்சமாக இருந்ததாக இந்திய இளம் வீரர் ஹர்ஷித் ராணா கூறியுள்ளார். போட்டி முடிந்த பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, தொடர்ச்சியாக நல்ல லென்த்தில் பவுலிங் செய்வதே எனது முதன்மையான இலக்காகும். ஆரம்பத்திலேயே அவர்கள் என்னுடைய பந்துவீச்சை அட்டாக் செய்தார்கள். ஆனால், அப்போதும் நான் என்னுடைய லென்த்தில் இருந்து நகரவில்லை. அது பரிசைக் கொடுத்தது.
அவர்கள் அதிரடியாக விளையாடப் பார்த்தார்கள். அதை நானும், ரோகித்தும் விவாதித்தோம். அதாவது நான் முடிந்தளவுக்கு நெருக்கமாக பவுலிங் செய்ய வேண்டும் என அவர் கூறினார். அதையே நானும் முயற்சித்தேன். பிட்ச் இருதலைப் பட்சமாக இருந்தது. அதன் காரணமாக சில பந்துகள் திடீரென நின்று வந்தது.
இந்தப் போட்டியில் அறிமுகமானது எனது கனவு வாழ்க்கைப் போல இருக்கிறது. இதற்காக நான் கடினமாக உழைத்துள்ளேன். அந்த உழைப்புக்கான பரிசு தற்போது ஒரு வழியாக எனக்கு வந்து சேர்வதாக உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.