பாலோ ஆனை தவிர்த்ததை கொண்டாடிய இந்திய அணி.. மறைமுகமாக கலாய்த்த லயன்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி பாலோ ஆனை தவிர்த்தது.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனையடுத்து பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் 'டிரா'வில் முடிந்தது.
மழை பாதிப்புக்கு இடையே நடைபெற்ற இந்த 3-வது போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 74 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிய போதிலும் லோகேஷ் ராகுல் (84 ரன்), ரவீந்திர ஜடேஜா (77 ரன்) ஆகியோரது போராட்டத்தால் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்தது.
அப்போது பெவிலியனில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் வெற்றி கிடைத்தது போல் அந்த தருணத்தை கைதட்டி கொண்டாடினார்கள்.
இந்நிலையில் காபாவில் 5வது நாளில் தங்களுடைய பவுலிங்கை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள விரும்பாததாலேயே பாலோ ஆன் தவிர்த்ததை அப்படி கொண்டாடியிருக்கலாம் என்று ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் மறைமுகமாக கலாய்த்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியின் ரியாக்சன் எங்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அதைப்பற்றி எங்கள் அணியில் சில வீரர்கள் பேசினோம். ஏனெனில் நாங்கள் நன்றாக விளையாடி நல்ல நிலைக்கு வந்தோம். பாலோ ஆன் கொடுக்க முடியாதது விரக்தியை கொடுக்கிறது. ஆனாலும் நாங்கள் 185 ரன்கள் முன்னிலையில் இருந்தோம்.அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போதும் நம்மால் இந்தப் போட்டியை வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் இந்தியா இருக்கிறது என்பதை அவர்களது கொண்டாட்டம் காண்பித்தது.
அதே சமயம் ஒருவேளை நாங்கள் பாலோ ஆன் கொடுத்தால் எங்களுக்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் பேட்டிங் செய்ய வர வேண்டிய சூழல் ஏற்படும். அதனை இந்திய அணியினர் விரும்பவில்லை என்பதையும் அந்த கொண்டாட்டம் காண்பித்தது" என்று கூறினார்.