< Back
கிரிக்கெட்
அதனாலயே நாங்கள் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ஒதுக்கப்படுகிறோம் - பும்ரா ஆதங்கம்
கிரிக்கெட்

அதனாலயே நாங்கள் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ஒதுக்கப்படுகிறோம் - பும்ரா ஆதங்கம்

தினத்தந்தி
|
27 July 2024 6:52 AM IST

கேப்டன்ஷிப் பொறுப்பை எனக்கு கொடுங்கள் என்று தாம் கேட்க முடியாது என பும்ரா தெரிவித்துள்ளார்.

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

ஏனெனில் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக பந்து வீசி இருந்தார். இந்த தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி நிலையில், மிகக்குறைவான ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அதன் காரணமாக அவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த 2016-ல் இந்திய அணியில் அறிமுகமான அவர் வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசினார். அதன் காரணமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அசத்திய அவரால் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்கள் காணப்பட்டன.

ஆனால் 2018-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றி நாயகனாக அவதரித்தார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து வரும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

அதனால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் தற்சமயத்தில் பும்ரா நம்பர் 1 பவுலராக இருப்பதாக வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் பாராட்டினர்.

அப்படிப்பட்ட நிலையில் டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சூர்யகுமாரை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அது போன்ற சூழ்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என்பது ஒரு தரப்பு ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

இந்நிலையில் கேப்டன்ஷிப் பொறுப்பை எனக்கு கொடுங்கள் என்று தாம் கேட்க முடியாது என பும்ரா தெரிவித்துள்ளார். மேலும் அதிகமாக காயத்தை சந்திக்க கூடியவர்கள் என்பதால் எப்போதும் கேப்டன்ஷிப் பொறுப்பு பேட்ஸ்மேன்களிடமே செல்வது வாடிக்கையாகி விட்டதாகவும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அணியிடம் சென்று நீங்கள் என்னை கேப்டனாக்குங்கள் என்று நான் சொல்ல முடியாது. பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவதால் பவுலர்கள் புத்திசாலித்தனமானவர்கள் என்று நான் கருதுகிறேன். இப்போது போட்டிகள் வலுவாகியுள்ளது. மைதானங்கள் சிறிதாகியுள்ளது. அவற்றுக்கு எதிராகவும் நாங்கள் போராட வேண்டியுள்ளது. பந்தை அதிகமாக ஸ்விங் செய்வது பற்றிய செய்தி அல்லது டெக்னாலஜி வந்ததாக எனக்கு நினைவில் இல்லை. மக்கள் சிக்சர்கள் அடிப்பதையே விரும்புகின்றனர்.

அப்படி பவுலர்கள் மிகவும் கடினமான வேலை செய்கின்றனர். அவர்கள் பேட் அல்லது பிளாட்டான பிட்ச்சுக்கு பின்னே ஒளிந்து கொள்வதில்லை. அந்த கடினமான வேலையில் பவுலர்கள் நிறைய சவால்களை சந்திக்கின்றனர். இவற்றையெல்லாம் தாண்டி சாதித்து வருவது பவுலர்களை தைரியமாக்குகிறது. கேப்டனாக செயல்பட நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். பேட் கம்மின்ஸ் சிறப்பாக செயல்படுவதை நாம் பார்க்கிறோம்.

வாசிம் அக்ரம், கபில் தேவ், உலகக்கோப்பை வென்ற இம்ரான் கான் ஆகியோரை நான் பார்த்துள்ளேன். பவுலர்கள் மிகவும் புத்திசாலித்தனமானவர்கள். ஆனால் சில நேரங்களில் அவர்கள் உடலளவில் சிரமத்தை சந்திப்பார்கள். அதனாலேயே கேப்டன்ஷிப் பேட்ஸ்மேன்களுக்கு சென்று விடுகிறது. ஆரம்பத்தில் என்னுடைய பவுலிங் ஆக்சன் வேலை செய்யாது என்று பலரும் சொன்னார்கள்.

ஆனால் தற்போது அதை மக்கள் காப்பி செய்ய முயற்சிக்கின்றனர். அந்த வகையில் உங்களுடைய செயல்பாடுகளை பேச விட வேண்டும். அதற்கு பேட் கம்மின்ஸ் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. அவர் உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்றுள்ளார். எனவே பவுலர்களுக்கு கேப்டன்ஷிப் என்பது பாரம் என்று நான் கருதவில்லை" என கூறினார்.

மேலும் செய்திகள்