< Back
கிரிக்கெட்
பும்ராவை விட அந்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்தான் சிறந்தவர் - இக்சனுல்லா
கிரிக்கெட்

பும்ராவை விட அந்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்தான் சிறந்தவர் - இக்சனுல்லா

தினத்தந்தி
|
22 Oct 2024 2:35 PM IST

பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக இருப்பதாக வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற ஜாம்பவான்கள் சமீபத்தில் பாராட்டு தெரிவித்தனர்.

லாகூர்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்வதாக பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் துல்லியமான யார்கர் பந்தை வீசும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வருகிறார்.

டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வெறும் 4.17 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார்.

அதன் காரணமாக தற்சமயத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் தமக்கு மிகவும் பிடித்த பவுலர் என்று எம்எஸ் தோனி பாராட்டியிருந்தார். அதே போல பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவை விட நசீம் ஷாதான் சிறந்த பவுலர் என்று பாகிஸ்தான் வீரர் இக்சனுல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நீங்கள் பார்க்கும்போது ஜஸ்பிரித் பும்ராவை விட நசீம் ஷா சிறந்த பவுலராக செயல்பட்டு வருகிறார். நசீம் ஷா 2022 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். இருப்பினும் சில நேரங்களில் அவரைப் போன்ற வீரர்கள் ஒரு வருடம் கூட கடினமான காலத்திற்குள் தள்ளப்படுவார்கள். அதையும் தாண்டி நசீம் ஷா சிறந்த பவுலர் என்று நான் சொல்வேன்" என கூறினார்.

முன்னதாக பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக இருப்பதாக வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற பாகிஸ்தான் ஜாம்பவான்கள் கூட சமீபத்தில் பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்