< Back
கிரிக்கெட்
அந்த மருத்துவர்தான் உலகின் 8-வது அதிசயம் - வர்ணனையின்போது  குல்பாடினை கலாய்த்த இயன் ஸ்மித்
கிரிக்கெட்

அந்த மருத்துவர்தான் உலகின் 8-வது அதிசயம் - வர்ணனையின்போது குல்பாடினை கலாய்த்த இயன் ஸ்மித்

தினத்தந்தி
|
25 Jun 2024 4:25 PM IST

வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் ஆட்டத்தினிடையே குல்பாடின் நைப் தசை பிடிப்பு ஏற்பட்டதுபோல் மைதானத்தில் விழுந்தார்.

கிங்ஸ்டவுன்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள் மட்டுமே அடித்தது. இருப்பினும் மனம் தளராத அந்த அணி, முழு மூச்சுடன் போராடி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் மழை அவ்வப்போது வந்து ஆப்கானிஸ்தானுக்கு சோதனை கொடுத்தது. குறிப்பாக 12-வது ஓவர் வீசிக் கொண்டிருக்கும்போது மழை வருவது போல் தெரிந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்காளதேசத்தை விட ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. அதன் காரணமாக பெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட், எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்குங்கள் என்று சைகையில் ஆலோசனை வழங்கினார்.

அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பாடின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தது போல் அப்படியே மைதானத்தில் விழுந்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.

மீண்டும் தொடங்கி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்ற பின்னர், இதனை கொண்டாட குல்பாடின் நைப் முதல் ஆளாக பெவிலியனில் இருந்து களத்திற்கு ஓடி வந்தார்.

குல்பாடின் நைபின் இந்த செயலை வர்ணனையில் ஈடுபட்டிருந்த நியூசிலாந்து முன்னாள் வீரரான இயன் ஸ்மித் நேரலையில் கலாய்த்தார். அதில்"எனக்கு 8 மாதங்களாக மூட்டு வலி இருக்கிறது. நான் உடனடியாக ஆப்கன் வீரர் குல்பாடினின் மருத்துவரை சென்று பார்க்கப் போகிறேன். அந்த மருத்துவர்தான் உலகின் 8வது அதிசயம்" என்று கலாய்த்தார்.

மேலும் செய்திகள்