மோசமாக விளையாடிய மேக்ஸ்வெல்லுக்கு அந்த பரிசை வழங்க வேண்டும் - மனோஜ் திவாரி விமர்சனம்
|பெங்களூரு அணியிலிருந்து மேக்ஸ்வெல்லை கழற்றி விட வேண்டும் என்று மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
நடப்பு ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்த அந்த அணி அதன்பின் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று அதிரடியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. இருப்பினும் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
நடப்பு சீசனில் பெங்களூரு அணியின் தோல்விக்கு ஆஸ்திரேலிய வீரரான கிளென் மேக்ஸ்வெல்லும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் அதிரடி ஆட்டக்காரரான அவர் இந்த தொடரில் வெறும் 52 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிலும் ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் பெங்களூரு அணியிலிருந்து மேக்ஸ்வெல்லை கழற்றி விட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், " மேக்ஸ்வெல் பற்றி நாம் இப்போது பேசியாக வேண்டும். அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஏகப்பட்ட அனுபவம் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்காக அற்புதமாக செயல்படும் அவர் பெங்களூரு அணிக்காக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.
குறிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடும்போது அவரது வங்கி கணக்கில் பணம் சென்று விடுகிறது என்பதனால் எதைப்பற்றியும் ஆர்வம் இல்லாமல் சிரித்து விட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு ஜாலியாக சென்று விடுகிறார். தோல்வியை சந்திக்கும்போது என்ன பிரச்சினை என்பதை நாம் விவாதிக்க வேண்டிய அவசியம் இங்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மோசமாக விளையாடிய மேக்ஸ்வெல்லை அணியில் இருந்து நீக்கி பரிசளித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு பெங்களூரு அணி செல்லும்" என்று கூறினார்.