< Back
கிரிக்கெட்
கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு நன்றி - தொடர் நாயகன் திலக் வர்மா பேட்டி

Image Courtesy: AFP

கிரிக்கெட்

கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு நன்றி - தொடர் நாயகன் திலக் வர்மா பேட்டி

தினத்தந்தி
|
16 Nov 2024 9:13 AM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

ஜோகன்னஸ்பர்க்,

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 109 ரன்களும், திலக் வர்மா 120 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 148 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதும், தொடரின் தொடர் நாயகன் விருதும் திலக் வர்மாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த ஆண்டு இந்த மைதானத்தில் விளையாடிய போது நான் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனேன். எனது ஆட்டம் அணிக்கும், இந்த தொடருக்கும் முக்கியமான ஒன்றாக இருந்தது. நான் பார்மையும், நம்பிக்கையையும் வைத்து எனது அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த விரும்பினேன்.

நான் அமைதியாகவும் அடிப்படை விஷயங்களில் கவனமாகவும் இருந்தேன். இங்கு நான் சதம் அடிப்பேன் என்று நினைக்கவில்லை. இதை நம்ப முடியாத உணர்வாக இருக்கிறது. அதுவும் தென் ஆப்பிரிக்காவில் அடித்ததை என்னால் மறக்கவே முடியாது. கடவுளுக்கும், என்னுடைய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக காயத்தில் இருந்த நான் என்னுடைய செயல் முறையில் நம்பிக்கை கொண்டிருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்