அனைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும் நன்றி - கான்வே
|கான்வே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2022 மற்றும் 2023 சீசன்களில் இடம்பெற்றிருந்தார்.
சென்னை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் நேற்று ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீசா பதிரானா ஆகிய 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது.
இருப்பினும் அந்த அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட இந்தியாவை சேர்ந்த தீபக் சாஹர், நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் மற்றும் கான்வே ஆகியோர் சென்னை சூப்பர் கிங்சின் ரசிகர்களிடையே பெயர் பெற்றவர்கள். அதிலும் குறிப்பாக கான்வே 2022 மற்றும் 2023 ஆகிய 2 சீசன்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும், 2023 சீசனில் சென்னை அணி கோப்பை வெல்வதில் முக்கிய பங்காற்றினார். இதனால் அவர் சென்னை அணியின் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் வீரர்களில் ஒருவர்.
தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாத நிலையில் கான்வே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "அற்புதமான 2 வருட ஆதரவிற்காக சிஎஸ்கே-வின் அனைத்து விசுவாசமான ரசிகர்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.