இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணி தடுமாற்றம்
|காமிந்து மென்டிஸ் 56 ரன்களும் , தினேஷ் சன்டிமால் 20 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
மான்செஸ்டர்,
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் மான்செஸ்டரில் கடந்த 21ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணியில் ஜாமி சுமித் சதம் அடித்து அசத்தினார். அவரது சதத்தின் மூலம் இங்கிலாந்து வலுவான நிலையை எட்டியது. இருப்பினும் மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்காததால் இங்கிலாந்து 85.3 ஓவர்களில் 358 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாமி சுமித் 111 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நிஷான் மதுஷ்கா, குசல் மென்டிஸ் இருவரும் டக்-அவுட் ஆனார்கள். திமுத் கருணாரத்னே 27 ரன்னில் வெளியேறினார் . கேப்டன் தனஞ்ஜயா டி சில்வாவும் (11 ரன்) நிலைக்கவில்லை. இந்த தடுமாற்றத்துக்கு மத்தியில் முன்னாள் கேப்டன் மேத்யூஸ் திறம்பட சமாளித்து அரைசதம் அடித்தார். அவர் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காமிந்து மென்டிஸ் அரைசதமடித்தார்.
இந்த நிலையில் நேற்று 3வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. காமிந்து மென்டிஸ் 56 ரன்களும் , தினேஷ் சன்டிமால் 20 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.