< Back
கிரிக்கெட்
டெஸ்ட் தொடர்: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா
கிரிக்கெட்

டெஸ்ட் தொடர்: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா

தினத்தந்தி
|
7 Jan 2025 6:32 AM IST

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் 2-வது டெஸ்ட் நேற்று முடிவடைந்தது.

கேப்டவுன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 615 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரையான் ரிக்கெல்டன் 259 ரன்களும், பவுமா 106 ரன்களும், வெர்ரைன் 100 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 194 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. அதிகபட்சமாக பாபர் அசாம் 58 ரன்கள் அடிக்க, தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 421 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 122.1 ஓவர்களில் 478 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷான் மசூத் 145 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா, கேஷவ் மகராஜ் தலா 3 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு 58 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 7.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேவிட் பெடிங்ஹாம் 47 ரன்களுடனும், மார்க்ரம் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. ரையான் ரிக்கெல்டன் ஆட்ட நாயகனாகவும், மார்கோ ஜான்சன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்