தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரை ஆலோசகராக நியமித்த இலங்கை
|இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும்.
இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி டர்பனிலும், 2வது போட்டி க்கெபெர்ஹாவிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணியின் ஆலோசகராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் நீல் மெக்கன்சி நியமிக்கப்பட்டு உள்ளார்.
நீல் மெக்கன்சி தென் ஆப்பிரிக்க அணிக்காக 58 டெஸ்ட், 64 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதற்கு முன்னதாக வங்காளதேச அணியின் பேட்டிங் ஆலோசகராகவும், ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.