கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்...மோசமான சாதனை படைத்த இந்திய அணி

Image Courtesy: AFP

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்...மோசமான சாதனை படைத்த இந்திய அணி

தினத்தந்தி
|
3 Nov 2024 6:49 AM IST

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து வில் யங் (71 ரன்), டேரில் மிட்செல் (82 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் லாதம் 1 ரன்னிலும், கான்வே 22 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வில் யங் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் ரச்சின் ரவீந்திரா 4 ரன், டேரில் மிட்செல் 21 ரன், ப்ளெண்டல் 4 ரன், பிலிப்ஸ் 26 ரன், இஷ் சோதி 8 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய வில் யங் அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து மேட் ஹென்றி மற்றும் அஜாஸ் படேல் களம் இறங்கினர்.

இறுதியில் நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சில் 43.3 ஓவர்களில் 171 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 7 ரன்னுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து இதுவரை 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது, நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் இதுவரை 13 முறை ரன் ஏதுமின்றி 'டக்-அவுட்' ஆகி இருக்கிறார்கள். 3 மற்றும் அதற்கு குறைவான ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் அதிகபட்ச 'டக்-அவுட்' இதுவாகும்.

இதற்கு முன்பு 1974-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் 12 முறை 'டக்-அவுட்' ஆனதே மோசமான சாதனையாக இருந்தது.

மேலும் செய்திகள்