டெஸ்ட் கிரிக்கெட்; சச்சின் சாதனையை சமன் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்
|பெர்த் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்
பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை (2024-25) தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டார்க் 26 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்திருந்தது.
ஜெய்ஸ்வால் 90 ரன்களும் , கேஎல் ராகுல் 62 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா தரப்பில் ராகுல் 77 ரன், ஜெய்ஸ்வால் 161 ரன், படிக்கல் 25 ரன், ரிஷப் பண்ட் 1 ரன் மற்றும் ஜூரெல் 1 ரன் எடுத்து அவுட் ஆகினர். தற்போது விராட் கோலி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைந்து ஆடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 161 ரன் எடுத்ததன் மூலம் சச்சினின் மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது, 23 வயதினை எட்டுவதற்குள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையை (4 முறை) ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (8 முறை) முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் பாகிஸ்தானின் ஜாவேத் மியான்டத், தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் (தலா 4 முறை) உள்ளனர்.