டெஸ்ட் கிரிக்கெட்; இலங்கைக்கு 348 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
|இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் வீழ்த்தினார்.
கெபேஹா,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் வெர்ரைன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 89 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து 32 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்திருந்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் பவுமா 48 ரன்களுடனும், ஸ்டப்ஸ் 36 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட், விஷ்வா பெர்ணாண்டோ 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 221 ரன் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து பேட்டிங் செய்தது.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா தனது 2வது இன்னிங்சில் 86 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 317 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக பவுமா 66 ரன் எடுத்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 347 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து 348 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை ஆட உள்ளது.