< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்; முதல் சதம் அடித்த சர்பராஸ் கான்... பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்; முதல் சதம் அடித்த சர்பராஸ் கான்... பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

தினத்தந்தி
|
19 Oct 2024 4:11 PM IST

நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய சர்பராஸ் கான் 150 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சர்பராஸ் கானுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக சர்பராஸ் கான் பந்துகளை பவுண்டரி , சிக்ஸருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சர்பராஸ் கான் சதமடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது முதல் சதமாகும்.

தொடர்ந்து இருவரும் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் அதிரடியாக ஆடிய சர்பராஸ் கான் 150 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக முதல் சதம் அடித்த சர்பராஸ் கானையும், நியூசிலாந்துக்காக சதம் விளாசிய ரச்சின் ரவீந்திராவையும் இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

வாழ்க்கையின் வேர்களை அடைய கிரிக்கெட்டும் ஒரு வழியாகும். பெங்களூர் மண்ணிற்கும் ரச்சின் ரவீந்திராவுக்கும் ஸ்பெஷலான தொடர்பு உள்ளது. நியூசிலாந்து அணிக்காக விளையாடினாலும், அவரின் குடும்பம் பெங்களூரை சேர்ந்தது. இன்று அதே மைதானத்தில் சதம் அடித்துள்ளார். அதேபோல் சர்பராஸ் கான். இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படும் போது, உங்கள் முதல் டெஸ்ட் சதத்தை அடித்தது என்ன ஒரு சந்தர்ப்பம். இரு திறமையான பேட்ஸ்மேன்களுக்கும் சுவாரஸ்யமான காலம் காத்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்