டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய மண்ணில் உலக சாதனை படைத்த ரிஷப் பண்ட்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் பண்ட் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
சிட்னி,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களும் அடித்தன.
பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்துள்ளது ஜடேஜா 8 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அதிரடியாக விளையாடிய பண்ட் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா இதுவரை 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த இன்னிங்சில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் களமிறங்கிய முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடியாக தொடங்கினார். 29 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உட்பட 61 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஜான் பிரவுன் (இங்கிலாந்து) மற்றும் ராய் பிரடெரிக்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் தலா 33 பந்துகளில் அரைசதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தரப்பில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்திலும் அவரே உள்ளது குறிப்பிடத்தக்கது.