< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்; இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நியூசிலாந்து

Image Courtesy: AFP

கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்; இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நியூசிலாந்து

தினத்தந்தி
|
17 Dec 2024 8:39 AM IST

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

ஹாமில்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 347 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியினர், நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 143 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 204 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 453 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 156 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேக்கப் பெத்தேல் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து நியூசிலாந்து முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையுடன் சேர்த்து இங்கிலாந்துக்கு 658 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டை இழந்து 18 ரன்கள் எடுத்திருந்தது.

இங்கிலாந்து தரப்பில் ஜேக்கப் பெத்தேல் 9 ரன்னுடனும், ஜோ ரூட் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.இந்நிலையில், 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ஜேக்கப் பெத்தேல் 76 ரன்னிலும், ஜோ ரூட் 54 ரன்னிலும் அவுட் ஆகினர்.

தொடர்ந்து களம் புகுந்த இங்கிலாந்து அணியினர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சில் 234 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 76 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் சாண்ட்னெர் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தாலும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

மேலும் செய்திகள்