< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்: ரோகித்துடன் அவரை ஒப்பிட கூடாது - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்: ரோகித்துடன் அவரை ஒப்பிட கூடாது - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

தினத்தந்தி
|
31 Dec 2024 10:10 AM IST

அஜித் அகர்கர் மட்டுமே ரோகித் சர்மாவை அணியிலிருந்து நீக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கியதால் இந்த டெஸ்ட் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்பட்டது. இதில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த தோல்விக்கு ரோகித் சர்மா மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் இந்த தொடரின் முதல் போட்டியில் ரோகித் இல்லாத சூழலில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது போட்டியிலிருந்து கேப்டனாக செயல்படும் ரோகித் சர்மா பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டன்ஷிப்பிலும் சொதப்பி வருகிறார்.

மறுபுறம் மற்றொரு முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலியும் இந்த தொடரில் சொதப்பி இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவுக்கு ரோகித் சர்மா தகுதியான பேட்ஸ்மேன் கிடையாது என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். மேலும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மட்டுமே அவரை அணியிலிருந்து நீக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாகவும் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிடம் ஒப்பீடு இருக்கக்கூடாது என்று சொல்வேன். ஏனெனில் விராட் கோலி சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலில் இருப்பார். ரோகித் சர்மா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் நல்ல பேட்ஸ்மேன் மட்டுமே.

எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நீண்ட கால திட்டத்திற்கு இப்போதும் தகுதியானவர். இருப்பினும் அவருடைய தற்போதைய தடுமாற்றத்தை சரி செய்யாத அளவுக்கு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் என்ன செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். விராட் கோலியை பற்றி அதிகம் பேசி விட்டோம். எனவே அவரை தனியாக விடுங்கள்.

இது உண்மையில் ரோகித் சர்மாவைப் பொறுத்தது அல்ல. அணித் தேர்வின் நெறிமுறை மற்றும் நிலையை பார்த்தால், தேர்வுக்குழுத் தலைவர் எவ்வாறு முடிவெடுக்க வேண்டும் என்பதை பொறுத்தது. இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்ததைச் செய்யும் அதிகாரம் அவருக்கு உள்ளது, எனவே எதிர்காலம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ரோகித் சர்மாவைப் பொறுத்தது அல்ல" என்று கூறினார்.

மேலும் செய்திகள்