< Back
கிரிக்கெட்
ஆசிய கண்டத்திற்கு வெளியே ஆடிய முதல் டெஸ்ட் தொடரிலேயே வெற்றி.. வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்

image courtesy: twitter/@ACBofficials

கிரிக்கெட்

ஆசிய கண்டத்திற்கு வெளியே ஆடிய முதல் டெஸ்ட் தொடரிலேயே வெற்றி.. வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்

தினத்தந்தி
|
7 Jan 2025 6:54 AM IST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.

புலவாயோ,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் புலவாயோவில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 157 ரன்னும், ஜிம்பாப்வே 243 ரன்னும் எடுத்தன. 86 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் 363 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, ரஷித் கானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 205 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடரை 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்து இருந்தது. ஒட்டுமொத்தத்தில் 11-வது டெஸ்டில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி ருசித்த 4-வது வெற்றி இதுவாகும்.

முன்னதாக ஆசிய கண்டத்துக்கு வெளியே ஆப்கானிஸ்தான் விளையாடிய முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இதன் மூலம் ஆசிய கண்டத்திற்கு வெளியே விளையாடிய முதல் டெஸ்ட் தொடரிலேயே வெற்றி கண்ட முதல் ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது.

மேலும் செய்திகள்