டெஸ்ட் கிரிக்கெட்; ஒரு வருடத்தில் 50 விக்கெட்... 3வது இந்திய வீரராக சாதனை படைத்த பும்ரா
|ஆஸ்திரேலியா தரப்பில் மெக்ஸ்வீனி 38 ரன்னுடனும், லபுஸ்சேன் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
அடிலெய்டு,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து 2-வது விக்கெட்டுக்கு கை கோர்த்த கேஎல் ராகுல் - கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இவர்கள் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கே.எல். ராகுல் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 7 ரன், பண்ட் 21 ரன், ரோகித் சர்மா 3 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். கில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.இறுதி கட்டத்தில் நிதிஷ் ரெட்டி அதிரடியாக விளையாடி அணிக்கு விரைவாக ரன்களை சேர்த்தார்.
முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் மெக்ஸ்வீனி களம் இறங்கினர்.
இதில் கவாஜா 13 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து லபுஸ்சேன் களம் இறங்கினார். மெஸ்வீனி - லபுஸ்சேன் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை மட்டும் இழந்து 86 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் மெக்ஸ்வீனி 38 ரன்னுடனும், லபுஸ்சேன் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா இன்னும் 94 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக இப்போட்டியில் எடுத்த கவாஜா விக்கெட்டையும் சேர்த்து இந்த வருடம் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 50* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 50 விக்கெட்டுகள் எடுத்த 3வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற தனித்துவமான சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார்.
இதற்கு முன் 1979, 1983-ம் ஆண்டுகளில் கபில் தேவ் 2 முறை 50 விக்கெட்டுகளை எடுத்து அந்த சாதனையை முதல் முறையாக படைத்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஜாகிர் கான் 2002-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவர்களுக்கு பின்னர் இப்போது தான் பும்ரா 22 வருடங்கள் கழித்து ஒரே வருடத்தில் 50 விக்கெட்டுகளை எடுத்து அந்த வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.