ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்; 2ம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 95/2
|ஜிம்பாப்வே தரப்பில் சீன் வில்லியம்ஸ் 154 ரன், பிரையன் பென்னட் 110 ரன், கிரேக் எர்வின் 104 ரன் எடுத்தனர்.
புலவாயோ,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்திருந்தது. சீன் வில்லியம்ஸ் 145 ரன்னும், எர்வின் 56 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதில் தொடர்ந்ஹ்டு பேட்டிங் செய்த ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே தரப்பில் சீன் வில்லியம்ஸ் 154 ரன், பிரையன் பென்னட் 110 ரன், கிரேக் எர்வின் 104 ரன் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் கசன்பர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் தனது நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மத் ஷா 49 ரன்னுடனும், ஷாகிதி 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.