தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; இலங்கை 328 ரன்களில் ஆல் அவுட்
|தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
கெபேஹா,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் வெர்ரைன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 242 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கை தரப்பில் மேத்யூஸ் 40 ரன்னுடனும், காமிந்து மெண்டிஸ் 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
116 ரன்கள் பின்னிலையுடன் இலங்கை இன்று பேட்டிங்கை தொடங்கியது. இதில் மேத்யூஸ் 44 ரன்னிலும், காமிந்து மெண்டிஸ் 48 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய தனஞ்செயா டி சில்வா 14 ரன், குசல் மெண்டிஸ் 16 ரன், பிரபாத் ஜெயசூர்யா 24 ரன், விஷ்வா பெர்ணாண்டோ 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் இலங்கை தனது முதல் இன்னிங்சில் 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 89 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து 32 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.