< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: தோல்விக்குப்பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் கூறியது என்ன..?
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை அரையிறுதி: தோல்விக்குப்பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் கூறியது என்ன..?

தினத்தந்தி
|
27 Jun 2024 1:44 PM IST

டி20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்க அணியிடம் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது

டிரினிடாட்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென்ஆப்பிரிக்க அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அஸ்மத்துல்லாவை (10 ரன்கள்) தவிர மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. வெறும் 11. 5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஷாம்சி மற்றும் ஜேன்சன் தலா 3 விக்கெட்டுகளும், ரபடா மற்றும் நார்ஜே தலா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, 57 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 60 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரீசா ஹென்ரின்க்ஸ் 29 ரன்களும், மார்க்ரம் 23 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது.

இந்த தோல்வி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் பேசுகையில், "நிச்சயம் ஒரு அணியாக சோகமான முடிவுதான். நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க முடியும். ஆனால் சூழல் எங்களை நன்றாக விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் எல்லாவிதமான சூழல் மற்றும் பிட்சிற்கும் தயாராக இருக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர். இந்த டி20 உலகக்கோப்பையில் எங்களின் வேகப்பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது. ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் வெல்ல வேண்டுமென்றால், நல்ல தொடக்கம் வேண்டும். முஜீப் உர் ரஹ்மான் காயம் ஏமாற்றத்தை அளித்தாலும், பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்து முகமது நபி மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார். அதனால்தான் ஸ்பின்னர்களின் பணி எளிதாக இருந்தது. நிச்சயம் இந்த டி20 உலகக்கோப்பையை நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடினோம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

இந்த அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது எங்களுக்கு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன். எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது. நாங்கள் இதுவரை செய்ததை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த டி20 உலகக்கோப்பையை ஒரு நம்பிக்கையாக எடுத்து கொள்கிறோம். எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். மிடில் ஆர்டரில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். அடுத்தடுத்து பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டு நிச்சயம் கம்பேக் கொடுப்போம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்