< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இந்திய அணியில் சிறந்த பீல்டர் விருது வென்ற ரிஷப் பண்ட்
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இந்திய அணியில் சிறந்த பீல்டர் விருது வென்ற ரிஷப் பண்ட்

தினத்தந்தி
|
28 Jun 2024 3:23 PM IST

ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

கயானா,

கடந்த 1-ம் தேதி தொடங்கிய 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் இறுதிப்போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இதில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

அதன்படி கயானா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 57 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 103 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 25 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சிறந்த பீல்டராக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் வழங்கி கவுரவித்தார். ரிஷப் பண்ட் இந்த விருதை பெறுவது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்