< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: ரோகித் சர்மா என்னிடம் மன்னிப்பு கோரினார் - சஞ்சு சாம்சன்

image courtesy: PTI

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: ரோகித் சர்மா என்னிடம் மன்னிப்பு கோரினார் - சஞ்சு சாம்சன்

தினத்தந்தி
|
22 Oct 2024 5:38 PM IST

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நீங்கள் விளையாடுவீர்கள் என்று ரோகித் தம்மிடம் தெரிவித்ததாக சாம்சன் கூறியுள்ளார்.

மும்பை,

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக அந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட தேர்வு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் பிளெயிங் 11-ல் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் நீங்கள் விளையாடுவீர்கள் என்று ரோகித் சர்மா தம்மிடம் தெரிவித்ததாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். ஆனால் டாஸ் வென்ற பின் சூழ்நிலையின் காரணமாக வாய்ப்பு கொடுக்காததற்காக தம்மிடம் ரோகித் மன்னிப்பு கேட்டதாகவும் சாம்சன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "இறுதிப்போட்டியில் எனக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். அதில் விளையாட தயாராக இருக்குமாறு என்னிடம் சொல்லப்பட்டது. முடிவில் டாஸ் வென்ற பின் அதே அணியுடன் விளையாட உள்ளதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். டாஸ் முடிந்த பின் ரோகித் பாய் என்னிடம் அதற்காக மன்னிப்பு கேட்டார். அப்போது பரவாயில்லை என்ற மனநிலையிலேயே நான் இருந்தேன்.

மேலும் ரோகித் என்னை அழைத்துச் சென்று அந்த முடிவை பற்றி புரிய வைத்தார். அப்போது முதலில் நாம் போட்டியை வெல்வோம். பின்னர் இது பற்றி பேசலாம். நீங்கள் போட்டியில் கவனம் செலுத்துங்கள் என்று அவரிடம் சொன்னேன். ஒரு நிமிடம் கழித்து மீண்டும் என்னிடம் வந்த ரோகித் மனதிற்குள் நீங்கள் எனக்கு சாபம் விடுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது போல் நான் உணர்கிறேன் என்று சொன்னார். அவரிடம் ஒரு வீரராக நான் விளையாடவே விரும்புகிறேன் என்று சொன்னேன். ஏனெனில் சிறு வயது முதலே அதற்காக நான் காத்திருந்தேன்.

எனவே கடைசியில் ரோகித் சர்மா போன்ற ஒருவர் தலைமையில் விளையாடாதது வாழ்நாள் முழுவதும் எனக்கு வருத்தமாகவே இருக்கும். இருப்பினும் அணிக்காக ரோகித் சர்மா அந்த முடிவை எடுத்தார். ஆனால் அப்போது மற்ற வீரர்களிடம் கவனத்தை செலுத்தாமல் அவர் அந்த முடிவு பற்றி என்னிடம் அதை விளக்குவதில் கவனம் செலுத்தினார். அந்த தருணத்தில் என் இதயத்தில் ஒரு இடத்தை வென்ற அவர் வாழ்நாள் முழுவதும் இருப்பார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்