< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை நாயகனுக்கே அணியில் இடம் இல்லையா..? ஆகாஷ் சோப்ரா கேள்வி
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை நாயகனுக்கே அணியில் இடம் இல்லையா..? ஆகாஷ் சோப்ரா கேள்வி

தினத்தந்தி
|
21 July 2024 8:55 AM GMT

இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த இலங்கை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொடர் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த அணியில் டி20 உலகக்கோப்பையில் விளையாடிய சில நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள வேளையில் சில புதுமுக வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பையில் குரூப் 8 மற்றும் நாக்அவுட் சுற்று போட்டிகளில் நாயகனாக செயல்பட்ட அவர் ஐந்து போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்ற ஒரு அங்கம் வகித்திருந்தார்.

குல்தீப் இடம் பெறாதது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "இந்திய டி20 அணியில் குல்தீப் யாதவ் இடம் பெறாதது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏனெனில் டி20 உலகக்கோப்பை தொடரின்போது அவர் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி நாயகனாக செயல்பட்டார். அவர் இருக்கும்போது ரவி பிஷ்னாய் மற்றும் வாஷிங்டன் சுந்தரை ஏன் சேர்த்தார்கள்? என்று புரியவில்லை. அதேபோன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் சாஹல் மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம்பெறாதது ஏன்? என்றும் புரியவில்லை" என்று கூறினார்.

மேலும் செய்திகள்