டி20 உலகக்கோப்பை: அவரது கதை முடிந்துவிட்டது என்று யாரும் எழுத வேண்டாம் - வாசிம் ஜாபர்
|இப்போதும் விராட் கோலி டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக வருவார் என்று வாசிம் ஜாபர் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
மும்பை,
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா, 2-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனையடுத்து 3-வது ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது மட்டுமின்றி சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதிபெற்று அசத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய கடைசி லீக் போட்டியில் கனடாவை எதிர்கொள்கிறது.
முன்னதாக இந்திய அணியின் பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரங்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தடுமாற்றமாக செயல்பட்டு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி இதுவரை 1, 4, 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக துவக்க வீரராக களமிறங்கி 741 ரன்கள் அடித்த அவர் ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதனால் இந்த உலகக்கோப்பையிலும் விராட் கோலி அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைப்பார் என்று ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித் போன்ற பலரும் கணித்திருந்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக தடுமாறும் விராட் கோலி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டாகி சுமாராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் விராட் கோலியின் கதை முடிந்து விட்டதாக யாரும் எழுத வேண்டாம் என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏற்கனவே கணித்தது போல் இப்போதும் விராட் கோலி இத்தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக வருவார் என்று அவர் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
"ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நியூயார்க் நகரில் கடினமான பிட்ச்சில் விளையாடினர். எனவே அவர்கள் டாப் ரன்கள் அடித்த வீரர்களில் இல்லை. அதனால் விராட் கோலியை முடிந்தவராக எழுத வேண்டாம். இந்த தொடர் இறுதிக்கட்டத்தை தொடும்போது அவர் அவர் தனது உண்மையான வண்ணங்களையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துவார்.
நான் விராட் கோலியை அதிக ரன்கள் அடிப்பவராக கணித்திருந்தேன். இப்போதும் அதையே சொல்கிறேன். விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று நான் கருதவில்லை. அவர் தொடர்ந்து ஓப்பனிங்கில் விளையாடலாம். ஏனெனில் ரிஷப் பண்டை 3வது களமிறக்கிய முடிவு வேலை செய்துள்ளது. ஜெய்ஸ்வால் இருப்பதால் இடது - வலது கை ஓப்பனிங் ஜோடியை தேர்ந்தெடுக்க முடியும் என்றாலும் அது சாத்தியமாக தெரியவில்லை" என்று கூறினார்.