கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: பயிற்சியாளர் டிராட்டை தோளில் சுமந்து கொண்டாடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: பயிற்சியாளர் டிராட்டை தோளில் சுமந்து கொண்டாடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்

தினத்தந்தி
|
25 Jun 2024 6:27 AM GMT

டி20 உலகக்கோப்பை தொடரில் வங்காளதேசத்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

கிங்ஸ்டவுன்,

டி20 உலகக்கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 1 பிரிவில் அரையிறுதிக்கு செல்லும் 2வது அணி எது? என்பதை தீர்மானிக்கும் முக்கிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இன்று மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. அரையிறுதிக்குள் முன்னேற 116 ரன்கள் என்ற இலக்கை 12.1 ஓவர்களில் அடைய வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் வங்காளதேசம் களமிறங்கியது. அதேவேளை, இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குள் முன்னேறிவிடலாம் என்ற சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் பந்து வீசியது.

ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இலக்கை 12.1 ஓவருக்குள் வங்காளதேசத்தால் அடைய முடியவில்லை. இதனால், வங்காளதேசத்தில் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது. ஆனால், ஆப்கானிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் வங்காளதேசம் விளையாடியது.

ஆப்கானிஸ்தானை தோற்கடித்தால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் செல்லும் என்ற நிலை இருந்ததால் ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் வங்காளதேசம் விளையாடியது.

ஆட்டத்தின் இடையே அவ்வப்போது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் 1 ஓவர் குறைக்கப்பட்டது. அதன்படி, வங்காளதேசம் 19 ஓவரில் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் ஆட்டம் சூடுபிடித்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பான பந்து வீச்சால் வங்காளதேசம் 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேசத்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.

ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றதன் மூலம் அரையிறுதிக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் கனவு தகர்ந்தது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் வங்காளதேசத்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியதையடுத்து அந்த அணியின் வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும், அணியின் தலைமை பயிற்சியாளரான ஜொனாதன் டிராட்டை தோளில் சுமந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோவையும் வீரர்கள் தோளில் சுமந்து கொண்டாடினர்.

மேலும் செய்திகள்