தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: சிறந்த பீல்டர் விருது வென்ற வீரர் யார்..?
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.
ஜோகன்னஸ்பர்க்,
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 120 ரன்களும், சாம்சன் 109 ரன்களும் குவித்து அசத்தினர்.
இதனையடுத்து 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி வெறும் 18.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 148 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முன்னதாக ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு சிறந்த பீல்டர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. ஆனால் இந்த தொடரில் 4-வது போட்டிகான சிறந்த பீல்டர் மற்றும் தொடர் முழுவதும் சிறந்த பீல்டர் என தனித்தனியே 2 விருது வழங்கப்பட்டது.
அதன்படி 4-வது போட்டிகான சிறந்த பீல்டராக ரவி பிஷ்னோய் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர் முழுவதும் சிறப்பாக பீல்டிங் செய்த விருது திலக் வர்மாவுக்கு அளிக்கப்பட்டது.