பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; ஆஸ்திரேலிய கேப்டனாக செயல்படும் இளம் வீரர்
|பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை இளம் வீரரான ஜோஷ் இங்கிலிஸ் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.
ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அப்போது ஆச்சரியப்படும் விதமாக அந்த அணிக்கு கேப்டன் யார்? என்று அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை இளம் வீரரான ஜோஷ் இங்கிலிஸ் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலிய சீனியர் வீரர்கள் தயாராகும் பொருட்டு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய டி20 அணி விவரம்; சீன் அப்போட், சேவியர் பார்ட்லெட், கூப்பட் கன்னோலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ப்ரேசர் மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ் (கேப்டன்), ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.