டி20 கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிர்ச்சி அளித்த வங்காளதேசம்
|வங்காளதேசம் தரப்பில் அபாரமாக பந்துவீசிய மெஹதி ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
கிங்ஸ்டவுன்,
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக சவுமியா சர்கார் 43 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகெல் ஹொசைன், ஓபெட் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்காளதேசத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 140 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் பவல் 60 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் அபாரமாக பந்துவீசிய மெஹதி ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி வரும் 18ம் தேதி நடைபெறுகிறது.