< Back
கிரிக்கெட்
டி20 கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய வங்காளதேசம்

Image Courtesy: @BCBtigers / @windiescricket

கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய வங்காளதேசம்

தினத்தந்தி
|
20 Dec 2024 10:35 AM IST

வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஜாக்கர் அலி 72 ரன்கள் எடுத்தார்.

செயிண்ட் வின்செண்ட்,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்களில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஜாக்கர் அலி 72 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்காளதேசத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 109 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 80 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரொமாரியோ ஷெப்பர்ட் 33 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என வங்காளதேசம் முழுமையாக கைப்பற்றியது.

மேலும் செய்திகள்