சையத் முஷ்டாக் அலி கோப்பை; சயான் கோஷ் அபார பந்துவீச்சு... பெங்கால் காலிறுதிக்கு முன்னேற்றம்
|சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
பெங்களூரு,
7-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, விதர்பா, டெல்லி, பரோடா, மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா அணிகள் நேரடியாக நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன. மேலும், பெங்கால், சண்டிகர், ஆந்திரா, உத்தரபிரதேசம் அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. இதில் பெங்கால் - சண்டிகர், ஆந்திரா - உத்தரபிரதேசம் அணிகள் மோதும்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், காலிறுக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் பெங்கால் - சண்டிகர் அணிகள் இன்று மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்தது. பெங்கால் தரப்பில் அதிகபட்சமாக கரண் லால் 33 ரன், முகமது ஷமி 32 ரன் எடுத்தனர்.
சண்டிகர் தரப்பில் ஜக்ஜித் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சண்டிகர் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 3 ரன் வித்தியாசத்தில் பெங்கால் திரில் வெற்றி பெற்றது.
சண்டிகர் தரப்பில் ராஜ் பாவா 32 ரன் எடுத்தார். பெங்கால் தரப்பில் சயான் கோஷ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பெங்கால் அணி காலிறுதிக்கு முன்னேறியது. பெங்கால் அணி காலிறுதி ஆட்டத்தில் பரோடாவை எதிர்கொள்கிறது.