சையத் முஷ்டாக் அலி கோப்பை; சாம்பியன் பட்டம் வென்றது மும்பை
|மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை - மத்திய பிரதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் குவித்தது. மத்திய பிரதேசம் தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 81 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஷர்துல் தாக்கூர், ராய்ஸ்டன் டயஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் கண்டது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் ரகானே ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிரித்வி ஷா 10 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 16 ரன்னில் அவுட் ஆனார். இதையத்து ரகானே உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
இதில் ரகானே 37 ரன்னிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 48 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த ஷிவம் துபே 9 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து அதர்வா அன்கோலேகர் மற்றும் சூர்யன்ஷ் ஷெட்ஜ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடினர். இறுதியில் மும்பை அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 180 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் எடுத்தார்.