சையத் முஷ்டாக் அலி கோப்பை; பெங்கால் அணியில் முகமது ஷமி
|சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான பெங்கால் அணியில் முகமது ஷமி இடம் பிடித்துள்ளார்.
கொல்கத்தா,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான (20 ஓவர்) சையத் முஷ்டாக் அலி கோப்பையின் 17-வது சீசன் வரும் 23-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரில் கலந்துகொண்டுள்ள 38 அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அணி 'குரூப் பி' -ல் இடம்பெற்றுள்ளது.
இந்த தொடருக்கான தமிழக அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. தமிழக அணிக்கு ஷாருக்கான் கேப்டனாகவும், துணை கேப்டனாக சாய் சுதர்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடருக்கான மும்பை அணி குரூப் - ஏ-வில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சீனியர் வீரரான முகமது ஷமி இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்த ஷமி ரஞ்சி டிராபி தொடரில் மத்திய பிரதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணிக்காக ஆடினார். இதையடுத்து அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளார் என தகவல் வெளி வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், அவர் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான பெங்கால் அணியில் இடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க செல்ல மாட்டார் என கூறப்படுகிறது.
பெங்கால் அணி விவரம்; சுதீப் கராமி (கேப்டன்), முகமது ஷமி, அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), சுதீப் சட்டர்ஜி, ஷாபாஸ் அகமது, கரண் லால், ரிட்டிக் சாட்டர்ஜி, ரித்விக் ராய் சவுத்ரி, ஷகிர் ஹபீப் காந்தி (விக்கெட் கீப்பர்), ரஞ்சோத் சிங் கைரா, பிரயாஸ் ரே பர்மன், அக்னிவ் பான் (விக்கெட் கீப்பர்), பிரதீப்தா பிரமாணிக், சக்ஷம் சவுத்ரி, இஷான் போரல், முகமது கைப், சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால், சயன் கோஷ், கனிஷ்க் சேத், சவும்யதீப் மண்டல்