< Back
கிரிக்கெட்
சையத் முஷ்டாக் அலி கோப்பை; ஜெகதீசன் அரைசதம்... தமிழகம் 221 ரன்கள் குவிப்பு

Image Courtesy: @TNCACricket

கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி கோப்பை; ஜெகதீசன் அரைசதம்... தமிழகம் 221 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி
|
27 Nov 2024 6:39 PM IST

தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக ஜெகதீசன் 57 ரன்கள் எடுத்தார்.

இந்தூர்,

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகள் தங்களுக்குள் 'நாக்-அவுட்' சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் காலிறுதியை எட்டும்.

இந்த தொடரில் குரூப் பி-யில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழக அணி பரோடாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து தமிழக தொடக்க ஆட்டக்காரர்களாக பாபா இந்திரஜித் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் இந்திரஜித் 25 ரன்னிலும், அடுத்து வந்த பூபதி குமார் 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.

ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஜெகதீசன் அரைசதம் அடித்த நிலையில் 57 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஷாரூக் கான் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஷாரூக் கான் 39 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. தமிழகம் தரப்பில் விஜய் சங்கர் 22 பந்தில் 42 ரன் எடுத்து ஆவுட் ஆகாமல் இருந்தார். இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி ஆட உள்ளது.

மேலும் செய்திகள்