சிட்னி டெஸ்ட்: அதிரடியில் இறங்கிய பண்ட்.. அரைசதம் அடித்து அசத்தல்
|இந்திய அணி இதுவரை 129 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
சிட்னி,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களும் அடித்தன.
இதனையடுத்து 4 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகள் அடித்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். இருப்பினும் பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ராகுல் 13 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சுப்மன் கில் (13 ரன்கள்), கோலி (6 ரன்கள்) இந்த முறையும் ஏமாற்றம் அளித்தனர்.
ஆனால் அதன்பின் களமிறங்கிய பண்ட் விக்கெட் சரிவை கண்டு கவலைப்படாமல் அதிரடியில் இறங்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20-யை போன்று அதிரடியாக விளையாடி வெறும் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். குறிப்பாக கடந்த இன்னிங்சில் உடலில் காயத்தை ஏற்படுத்திய ஸ்டார்க் பந்துவீச்சில் தொடர்ந்து 2 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். அணியை விரைவாக 100 ரன்களை கடக்க உதவிய அவர் 33 பந்துகளில் 61 ரன்கள் அடித்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தார்.
இந்திய அணி தற்போது வரை 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் அடித்துள்ளது. ஜடேஜா 2 ரன்களுடனும், நிதிஷ் ரெட்டி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 129 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.