< Back
கிரிக்கெட்
சிட்னி டெஸ்ட்: ரிஷப் பண்ட் மட்டும் இல்லையென்றால்.. - சுனில் கவாஸ்கர் பாராட்டு
கிரிக்கெட்

சிட்னி டெஸ்ட்: ரிஷப் பண்ட் மட்டும் இல்லையென்றால்.. - சுனில் கவாஸ்கர் பாராட்டு

தினத்தந்தி
|
5 Jan 2025 8:40 AM IST

ஆஸ்திரேலியாக்கு எதிரான 5-வது டெஸ்டில் பண்ட் 61 ரன்கள் குவித்தார்.

சிட்னி,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 185 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 181 ரன்னில் அடங்கியது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதனையடுத்து 4 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 157 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பண்ட் 61 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலன்ட் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய பண்ட் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் வேகமான அரை சதத்தை அடித்த வெளிநாட்டு வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பண்ட் மட்டும் இல்லையென்றால் இந்தியா இந்த நிலையை எட்டி இருக்காது என சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட் விளையாடிய விதத்தை வைத்து இது புத்திசாலித்தனமான ஆட்டம் என்று நினைக்கிறேன். அவர் ஸ்டம்புகளுக்கு முன்பாக விளையாடியதை நான் விரும்பினேன். பவர், டைமிங் ஆகியவற்றை கொண்டுள்ள அவரால் நீண்ட தூரத்திற்கு பந்தை அடிக்க முடியும். ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்கூப் போன்ற கண்மூடித்தனமான ஷாட்டுகளை அடிக்கும்போதுதான் அவர் பிரச்சனையில் சிக்குகிறார். ஏனெனில் இப்படி முன்னே நின்று அடிக்கும்போது கிடைக்கும் கட்டுப்பாடு அந்த வகையான ஆட்டத்தில் கிடைக்காது. அவருடைய ஆட்டம்தான் இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்தியா 100 ரன்களை கூட தாண்டியிருக்காது" என்று கூறினார்.

கடந்த போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டான ரிஷப் பண்டை நேரலையில் கவாஸ்கர் 'முட்டாள்' என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்