< Back
கிரிக்கெட்
சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் தற்காலிக கேப்டன்தான் - நியூசிலாந்து முன்னாள் வீரர் பேட்டி
கிரிக்கெட்

சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் தற்காலிக கேப்டன்தான் - நியூசிலாந்து முன்னாள் வீரர் பேட்டி

தினத்தந்தி
|
29 July 2024 7:33 AM IST

வருங்காலத்தில் 3 வகையான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை பிசிசிஐ நியமிக்கும் என்று ஸ்காட் ஸ்டைரிஸ் கணித்துள்ளார்.

வெலிங்டன்,

டி20 உலகக்கோப்பையை வென்றதுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா விடைபெற்று விட்டதால் இந்திய 20 ஓவர் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. உலகக்கோப்பையில் துணை கேப்டனாக பணியாற்றிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் பாண்ட்யாவுக்கு அடிக்கடி உடல்தகுதி பிரச்சினை ஏற்படுவதால் அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிப்பதே சரியாக இருக்கும் என்பது பயிற்சியாளர் கம்பீரின் விருப்பமாக இருந்தது. முடிவில் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன்ஷிப் 33 வயதான சூர்யகுமார் யாதவிடம் வழங்கப்பட்டுள்ளது.

துணை கேப்டன் பதவியும் பாண்ட்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் இனி துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருங்காலத்தில் 3 வகையான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை பிசிசிஐ நியமிக்கும் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கணித்துள்ளார். அத்துடன் தற்காலிகமாக ஓரிரு வருடங்கள் மட்டுமே சூர்யகுமார் கேப்டனாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "தலைமைப் பண்பை கற்றுக்கொண்டு எப்படி ஒரு அணியை வழி நடத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஒருவர் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார். அந்த வகையில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதில் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை. ஐபிஎல் தொடரில் அவர் பல நட்சத்திர வீரர்களை கேப்டன்ஷிப் செய்துள்ளார். உண்மையில் இது நீண்ட திட்டமாகும். இந்த முடிவு சொல்வது என்னவெனில் ஹர்திக் பாண்ட்யா இனிமேல் கேப்டனாக இருக்கப்போவதில்லை என்பதாகும்.

ரோகித் போன்ற சீனியர்கள் ஓய்வு பெற்று விட்டனர். தற்போதுள்ள அணியில் இயற்கையாக கேப்டனாக இருக்கக்கூடிய ஒரு வீரரை கவுதம் கம்பீர் பார்க்கவில்லை. சூர்யகுமாரையும் அவர் தற்காலிக கேப்டனாகவே பார்க்கிறார். அதன் பின் சுப்மன் கில் அடுத்த சில வருடங்களில் கேப்டனாக காலடி வைப்பார். ஏற்கனவே 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக விளையாடும் அவர் தொடர்ச்சியாக அசத்துவது மட்டுமே மீதமுள்ளது. சுப்மன் கில் போன்றவர் 10 வருடத்திற்கு இந்தியாவின் கேப்டனாக இருக்க முடியும். ஆனால் தற்போது அவர் தயாராக இல்லை. அதனாலேயே சூர்யகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்