< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்

அதிரடியில் மிரட்டிய சூர்யகுமார்... இலங்கை அணிக்கு 214 ரன்கள் வெற்றி இலக்கு

தினத்தந்தி
|
27 July 2024 8:52 PM IST

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.

பல்லகெலே,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று தொடங்கியது.

அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியினர் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தனர்.

சிறப்பான துவக்கம் தந்த இந்த ஜோடியில் சுப்மன் கில் 34 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ஜெய்ஸ்வாலும் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இந்த ஜோடியில் அதிரடியில் மிரட்டிய சூர்யகுமார் யாதவ் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 9 ரன்களும், ரியான் பராக் 7 ரன்களும் எடுத்து வெளியேறினர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பண்ட் 49 ரன்களில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் 1 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில் அர்ஷ்தீப் சிங் 1 ரன்னும், அக்சர் படேல் 10 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக சிறப்பாக பந்து வீசிய பதிரானா 4 விக்கெட்டுகளும், மதுசங்கா, ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

மேலும் செய்திகள்