சூப்பர் 8 சுற்று: குல்பாடின் அபார பந்துவீச்சு.. ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
|ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குல்பாடின் நைப் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
கிங்ஸ்டவுன்,
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 60 ரன்களும், ஜத்ரான் 51 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் ஜாம்பா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன டிராவிஸ் ஹெட் 0 ரன்னிலும், வார்னர் 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய மார்ஷ் 12 ரன்களிலும், ஸ்டோய்னிஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு குல்பாடின் நைப், நவீன் உல் ஹக் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
அந்த அணியில் மேக்ஸ்வெல் தனிஆளாக போராட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அதோடு அந்த அணியின் நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது.
19.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 127 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன்கள் குவித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய குல்பாடின் நைப் 4 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.