< Back
தலையங்கம்
ஒரு நிமிடத்தில் பட்டா!
தலையங்கம்

ஒரு நிமிடத்தில் பட்டா!

தினத்தந்தி
|
24 Jun 2024 6:39 AM IST

மின்னல் வேகத்தில் பட்டா கிடைக்க, எல்லோரும் அதிசயப்படும் வகையிலான முறையை கொண்டுவர அரசு இப்போது முடிவெடுத்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில், வருவாய்த்துறை மக்களோடு நேரடி தொடர்பில் உள்ள துறை. மனிதனுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை வருவாய்த்துறை அளிக்கும் சான்றிதழ்கள் மிகவும் இன்றியமையாதது. இதுமட்டுமல்லாமல், சாதி சான்றிதழ், வாரிசு உரிமைச் சான்றிதழ், நில உரிமைச் சான்றிதழ் என்று வருவாய்த்துறை வழங்கும் சான்றிதழ்தான் அனைத்து வாழ்வுரிமைகளுக்கும் அச்சாணியாக விளங்குகிறது. அரசின் எல்லா திட்டங்களையும் பெற இந்த சான்றிதழ்களே அடிப்படை.

வீடு, மனை, விளை நிலம், தரிசு நிலம் என எதுவென்றாலும் பட்டா என்பது மிக மிக முக்கியமானதாகும். நாம் கையில் வைத்திருக்கும் பத்திரம் என்பது இரு தனி நபர்களுக்கு இடையே நடந்த பரிமாற்ற ஆவணம்தான். ஆனால், பட்டா என்பது அந்த சொத்துக்கான சட்ட ரீதியிலான உரிமையை தனி நபர் அல்லது நிறுவனத்துக்கு வருவாய்த்துறை வழங்கும் ஆவணமாகும். அதுபோல, சிட்டா என்பது சொத்து அமைந்துள்ள பகுதி, அளவு, உரிமையாளர் முதலான விவரங்களை உள்ளடக்கிய ஆவணமாகும். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இந்த இரு ஆவணங்களும் தமிழ்நாடு நிலம் தொடர்பான ஆவணங்களில் பட்டா சிட்டா என்ற ஒரே ஆவணமாக இணைக்கப்பட்டுள்ளது.

அரசால் வழங்கப்படும் இந்த ஆவணம் உரிமைகளின் பதிவேடு என்றும் அழைக்கப்படுகிறது. பட்டா எண், மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றின் பெயர், சர்வே எண் மற்றும் உட்பிரிவு, அந்த நிலம் நன்செய் நிலமா?, புன்செய் நிலமா?, நிலம் அமைந்துள்ள பகுதி மற்றும் தீர்வை விவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதே பட்டாவாகும். ஆக மொத்தத்தில், ஒரு சொத்தின் உரிமையை நிலைநாட்டும் முதல் ஆவணம் பட்டாதான். அந்த வகையில், சொத்து உரிமையாளர்கள் ஒவ்வொருவரிடமும் பட்டா கையில் இருக்கவேண்டும்.

முன்பெல்லாம் பட்டாவுக்காக கிராம நிர்வாக அலுவலர் மூலம் தாசில்தாருக்கு விண்ணப்பித்தால் அலுவலக நடைமுறைகள் காரணமாக அந்த விண்ணப்பம் பலர் கைகளுக்கு சுற்றி சுற்றி சென்று பட்டா கிடைக்க பல நாட்கள் ஆகும். இந்த நடைமுறை சிக்கலுக்கு பயந்தே பலர் பட்டா வாங்குவதில்லை. இப்போது அரசு இதுபோன்ற சேவைகள் மக்களுக்கு விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் லஞ்சம் இல்லாமலும் கிடைப்பதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ற முறையைக் கொண்டுவந்து இருந்தது. இதுமட்டுமல்லாமல் மின்னல் வேகத்தில் பட்டா கிடைக்க, எல்லோரும் அதிசயப்படும் வகையிலான முறையை கொண்டுவர அரசு இப்போது முடிவெடுத்துள்ளது.

இனி பட்டாவுக்காக விண்ணப்பிக்க வேண்டிய தேவையே இல்லை. சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்ட உடன் அடுத்த நிமிடத்தில் பட்டாவும் தானாகவே பதிவாகி நில உரிமையாளர் கையில் கிடைத்துவிடும். இது வருவாய்த்துறை சாதனையில் ஒரு புதிய மைல் கல். விரைவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு விடும். சில ஊர்களில் சோதனை அடிப்படையில் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல, சொத்து வைத்து இருப்பவர்கள் ஏற்கனவே பட்டாவுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், முதலில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், உட்பிரிவு இல்லாத பட்டாவுக்கு 17 நாட்களிலும் உட்பிரிவு உள்ள பட்டாக்களுக்கு 30 நாட்களிலும் பட்டா வழங்கவேண்டும் என்று அரசு உத்தரவு வர இருக்கிறது. இந்த புதிய நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றினால் 'பட்டா' பெற இதுவரை மக்கள் சந்தித்த பிரச்சினைகளுக்கு இனி 'டாட்டா' காட்டிவிடலாம்.

மேலும் செய்திகள்